எம். ஜி. இராமச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
பொருளடக்கம் |
[தொகு] இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். பின்னர் சிறிது காலத்திற்குப்பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார்.
[தொகு] திரைப்பட வாழ்க்கை
1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதை பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்.
[தொகு] அரசியல் வாழ்க்கை
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும்[ஆதாரம் தேவை], தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்[ஆதாரம் தேவை]. இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்[ஆதாரம் தேவை]. இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
[தொகு] எம்.ஜி.ஆர். நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
- ராஜ ராஜன்
- ராஜகுமாரி
- மன்னாதி மன்னன்
- மந்திரி குமாரி
- திருடாதே
- மலைக்கள்ளன்
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
- மதுரை வீரன்
- புதுமைப்பித்தன்
- ஆயிரத்தில் ஒருவன்
- அன்பே வா
- எங்க வீட்டுப் பிள்ளை
- நாடோடி மன்னன்
- படகோட்டி
- ரிக்ஷாக்காரன்
- உலகம் சுற்றும் வாலிபன்
- ராமன் தேடிய சீதை
- அடிமைப்பெண்