ஒற்றைக் கற்றளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒற்றைக் கற்றளி என்பது நிலத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் பெரிய பாறைகளை வெளிப்புறமாகக் குடைந்து அமைக்கப்படும் கோயில் ஆகும். தளி என்பது கோயில் என்ற பொருள் தரும். எனவே கற்றளி (கல் + தளி) என்பது கற் கோயில் ஆகும். ஆரம்ப காலத்தில் கற்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்களாகவே இருந்தன. இவை பாறைகளை உட்புறமாகக் குகைபோல் குடைந்து செய்யப்பட்டனவாகும். இதனைத் தொடர்ந்தே ஒற்றைக் கற்றளித் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தது.
தமிழ் நாட்டில் ஒற்றைக் கற்றளிகளை முதலில் அமைத்தவர்கள் பல்லவர்கள் ஆவர். மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இரதக் கோயில்கள் ஒற்றைக் கற்றளிகளுக்கு எடுத்துக் காட்டாகும். ஒற்றைக் கற்றளிகள் செதுக்குவதற்குச் சிரமமானவை. இதனால் அமைப்பதற்கு இலகுவான கட்டுமானக் கோயில்கள் அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர் ஒற்றைக் கற்றளிகள் வழக்கிழந்து போயின. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னர் இத்தகைய கோயில்கள் எதுவும் கட்டப்படவில்லை.