சுற்றுச்சந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுற்றுச்சந்தி (roundabout) என்பது சாலைச் சந்திப்பு வகைகளுள் ஒன்றாகும். இவ்வகைச் சந்திப்புகளில், மையத்தில் அமைந்துள்ள வட்டவடிவத் தீவு ஒன்றைச் சுற்றிப் போக்குவரத்து நகர்ந்து செல்லும். சந்திப்பை நோக்கி வருகின்ற வண்டிகள், தீவைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கும் வண்டிகளுக்கு வழி விட்ட பின்பே சந்திப்புக்குள் நுழைய முடியும். இக்காலத்தில் புழக்கத்திலிருக்கும் சுற்றுச்சந்திகள் அறிமுகமாவதற்கு முன்னர், போக்குவரத்து வட்டப்பாதைகள் (traffic circle) என அழைக்கப்பட்ட அளவில் பெரியவையான ஒருவகைச் சந்திப்புகள் இருந்தன. சுற்றுச்சந்திகள், போக்குவரத்து வட்டங்கள் மற்றும் வழமையான குறுக்குச்சாலைச் சந்திப்புகளைவிட பாதுகாப்பானவையாகும். ஆனாலும் சுற்றுச் சந்திகள் நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றையொத்த விரைவு வாகனப் போக்குவரத்துள்ள சாலைகளின் போக்குவரத்துக்குப் பொருத்தம் இல்லாதவையாகும்.
[தொகு] வரலாறு
முதலாவது நவீன சுற்றுச்சந்தி, 1904 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டது. எனினும், பழைய போக்குவரத்து வட்டப்பாதைகள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கொள்ளளவுப் (capacity) பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, பிரித்தானியப் பொறியியலாளர்களால் அவை திருத்தியமைக்கப்பட்ட பின்பே சுற்றுச்சந்திகள் பரவலான புழக்கத்துக்கு வந்தன. சுற்றுச்சந்திகளில் மையப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மூலம் சந்திப்புக்குள் நுழைவது ஒழுங்கு படுத்தப்பட்டதனால், இது தொடர்பில் வட்டப்பாதைகளிலிருந்த குழப்பநிலை தவிர்க்கப்பட்டதுடன், நிறச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்ட சந்திப்புகளில் உள்ளது போன்ற தாமதங்களும் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டன.