தமிழ்நாட்டு ஓவியக் கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] இலக்கியத்தில் ஓவியம்
ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன.
"ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற மணிமேகலை வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக்கூறியிருக்கின்றனர்"[1].
ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்).
[தொகு] பாண்டியர் கால ஓவியங்கள்
முற்காலப் பாண்டியர் காலத்தைச் (கி.பி 550 - 950) சேர்ந்த குகை ஓவியங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த, சித்தன்னவாசல் என்னுமிடத்தில் உள்ள குடைவரைக் கோயில் ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது தவிர அரிட்டாபட்டி, திருமலைப்புரம், ஆனைமலை, கீழ்க்குயில்குடி, கீழவளவு, கரடிப்பட்டி ஆகிய இடங்களிலும் மேற்படி காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
[தொகு] பல்லவர் கால ஓவியங்கள்
தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஒவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன.
[தொகு] சோழர் கால ஓவியங்கள்
இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியங்களோடு ஒப்பிடத்தக்க பெருமையுடைய ஓவியங்களை சோழர் காலம் தமிழ் நாட்டுக்கு வழங்கியது. தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயிலிலுள்ள ஓவியங்கள் இத்தகைய பெருமை வாய்ந்தவை.
[தொகு] பிற்கால ஓவியங்கள்
விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், திருப்பருத்திக் குன்றம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நாயக்கர் காலத்து ஓவியங்களும் தமிழ் நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன.
17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே.
[தொகு] உசாத்துணை
- ↑ பக் 78, சாமிநாதையர், உ. வே., நல்லுரைக்கோவை 2ம் பாகம், 6 ஆம் பதிப்பு, சென்னை, 1991