தாய்ப்பே 101
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாய்ப்பே 101 (臺北 101) சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி (skyscraper) ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (臺北國際金融大樓 - Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது.
http://en.wikipedia.org/upload/b/bb/Taipei-101-construction-2003-07.jpg |
அக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை, உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றுள்ளது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.
உயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்:
- நிலத்திலிருந்து அலங்கார உச்சிவரை - இது தற்போது சியேர்ஸ் கோபுரத்திடம் உள்ளது. (529 மீ = 1736 அடி)
- நிலத்திலிருந்து அமைப்பு உச்சிவரை - முன்னர் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (452 மீ = 1483 அடி)
- நிலத்திலிருந்து கூரைவரை - முன்னர் சியேர்ஸ் கோபுரம் (431 மீ = 1430 அடி)
- நிலத்திலிருந்து அதியுயரத்திலுள்ள ஆட்கள் பயன்படுத்தும் தளம் வரை - தற்போது சியேர்ஸ் கோபுரம் (2004 ல் பயன்பாட்டுக்கு விடப்படும் போது, தாய்ப்பே கோபுரம் இப் பெருமையைப் பெறும்).
மேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது.
அலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி
கூரைவரை - 448 மீ = 1470 அடி
அதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி
இன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புக்கள் உண்டு. தொஷீபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. பூமியதிர்ச்சி, புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது.
2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. [1]
ஆற் மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.
சிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான பூமியதிர்ச்சிக்குத் தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிச்சர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிச்சர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
[தொகு] வெளி இணைப்புக்களும், உசாத்துணைகளும்
- Taipei Financial Corp: கம்பனித் தகவல்கள், நேரவரிசை, பங்குதாரர்கள், குடியிருப்போர் தகவல்களும், விலைமதிப்பும், செய்திக்கடிதம்.
- http://www.taipei-101.tk/: தற்போது,அதிகம் பார்க்கப்படும் தாய்ப்பே 101 வலைத் தளம். நாளொன்றுக்கு 500 பார்வையாளர்கள். 500+ படிமங்கள், தொழில்நுட்பத் தரவுகள், மற்றும் கட்டுமான நிகழ்நிலைப்படுத்தல்.
- http://www.taipei101mall.com உத்தியோகபூர்வ தாய்ப்பே 101 அங்காடி வலைத்தளம்.