திருமலை நாயக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. இதனுள், கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களும், திருவிதாங்கூர் அரசின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன.
திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார்.
[தொகு] ஆரம்பகாலம்
இவர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கருக்கு மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும்.