மதுரை நாயக்கர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதுரை நாயக்கர்கள், மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1559 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
பொருளடக்கம் |
[தொகு] மதுரை நாயக்கர் தோற்றம்
விஜயநகரத்துப் பேரரசன் கிருஷ்ண தேவராயன் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவன் நாகம நாயக்கன். இவனுடைய மகன் விசுவநாத நாயக்கன். கிருஷ்ண தேவராயரிடமே பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கன். பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கன் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டான். எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கன், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டான். இவனுடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
[தொகு] மதுரை நாயக்கர் வம்சம்
முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கனான முத்துவீரப்ப நாயக்கன், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டான். இவன் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கன் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னன் விஜயரங்க சொக்கநாத நாயக்கன் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவளுக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவளைச் சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டான். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.
[தொகு] மதுரை நாயக்கர்களின் பட்டியல்
- விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
- முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
- வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
- இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
- முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
- திருமலை நாயக்கர் (1623 - 1659)
- இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
- சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
- அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
- இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1706)
- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706 - 1732)
- இராணி மீனாட்சி (1732 - 1736)
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- நாயக்கர் காலக் கட்டிடக்கலை
- தஞ்சை நாயக்கர்கள்
[தொகு] உசாத்துணை நூல்கள்
- வே. தி செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1995 (மறுபதிப்பு 2002)