முத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடு முத்துக்களுக்குப் பெயர் பெற்றது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது. முத்து பொதுவாக ஒரு இரத்தினக் கல்லாகவே கருதி மதிக்கப்படுகிறது.
முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி (mollusc) உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட் அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கல்சியம் காபனேற்றையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் (mother-of-pearl) என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இயற்கையாக உருவாகும் முத்துக்களே பயன்பட்டன. ஆட்கள் நீருக்குள் இறங்கி முத்துச்சிப்பிகளைச் சேகரிப்பார்கள். இது முத்துக்குளிப்பு எனப்பட்டது. இயற்கை முத்துக்கள் விளையும் இடமாகப் பண்டைக்காலத்திலேயே புகழ் பெற்றிருந்த இடங்கள் பலவுள்ளன. அரேபியக் குடா, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பல்வேறு பசிபிக் தீவுகள், வெனிசுலா, மத்திய அமெரிக்கா ஆகியவற்றின் கரைகளை அண்டிய கடற் பகுதிகள் இவற்றுள் அடங்குவன.
தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது. யாழ்ப்பாணத்து அரசர்களும், தொடர்ந்து வந்த குடியேற்றவாத ஆட்சியாளர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர் முதலியோரும் இதன் மூலம் நல்ல வருவாய் பெற்றுள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் சிப்பிகளில் மிகச் சிலவற்றிலேயே முத்துக்கள் கிடைக்கும். இதனால் முத்து அரிதில் கிடைப்பதொன்றாகவும், விலை கூடியதாகவும் இருந்தது.
1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் (tissue) சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.
[தொகு] முத்துக்களும் தரமும்
இயற்கை முத்துக்களும், செயற்கையாக வளர்க்கப்படும் முத்துக்களும் உயிரினங்களால் உருவாக்கப்படுபவை இதனால் தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களைப்போல் ஒரே சீரான இயல்புகளைக் கொண்டிரா. கிடைக்கும் முத்துக்களின் சில இயல்புகள் விரும்பத்தக்கவை. சில விரும்பத்தகாதவை. ஒவ்வொரு முத்தும் இத்தகைய பல்வேறு விரும்பத்தக்க, விரும்பத்தகாத இயல்புகளின் கலவையாகவே காணப்படுகின்றன. இக் கூட்டு இயல்புகளைப் பொறுத்தே முத்தின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. முத்துக்களின் தரம் பின்வரும் இயல்புகளில் தங்கியுள்ளது.
- வகை,
- நேக்கரின் (nacre) தடிப்பு,
- ஒளிர்வுத் தன்மை (luster),
- மேற்பரப்பின் தன்மை,
- வடிவம்
- நிறம்,
- அளவு
[தொகு] முத்துக்களின் வகைகள்
முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன:
- அக்கோயா முத்து,
- தென்கடல் முத்து,
- தகித்தியன் முத்து,
- நன்னீர் முத்து
சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் அவற்றின் பெறுமதியும் அதிகம்.
[தொகு] நேக்கரின் தடிப்பு
முத்து உருவாக்கப்பட்டுள்ள பதார்த்தமே நேக்கர் ஆகும். எனவே நேக்கரின் நிறம், ஒளிர்வு என்பனவே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும்போது முத்தின் பெறுமதியும் கூடுகின்றது.
[தொகு] ஒளிர்வுத் தன்மை
ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளிதெறிக்கும் தன்மையினதும் அளவீடு ஆகும். நல்ல ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல் மங்கலான சொரசொரப்பானது வரையான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் உள்ளன. கூடிய ஒளிர்வும், பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை.
[தொகு] தரம்பிரிக்கும் முறைகள்
முத்துக்களைத் தரம் பிரிப்பதற்குப் பல முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு அவை AAA-A முறை, A-D முறை அல்லது தாகித்தியன் முறை என அழைக்கப்படுகின்றன.
AAA-A முறையில் முத்துக்கள் அவற்றின் தரத்திற்கேற்ப AAA, AA, A என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் AAA மிகக் கூடிய தரமான முத்துக்களையும், A மிகக் குறைந்த தரத்தையும் குறிக்கும்.
A-D முறையில் முத்துக்கள் A, B, C, D எனத் தரப்படுத்தப் படுகின்றன. இங்கே A அதி கூடிய தரமும், D குறைவான தரமும் கொண்டவை.