அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடுநிலைக்கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம். ஒரு விக்கிபீடியர் இக்கட்டுரையின் நடுவு நிலைமையை ஆராயக் கோரிப் பரிந்துரைத்திருக்கிறார். இப்பரிந்துரை குறித்த உரையாடலை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம். |
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தனது இளம் வயதிலேயே எஸ். ஜே. வி. செல்வநாயகத்தினால் தொடக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் புகுந்தவர். இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில், அவரது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளரான இவரது பேச்சைக் கேட்பதற்கென்றே கட்சிக் கூட்டங்களுக்கு மக்கள் திரண்ட காலம் இருந்தது. 1970 களின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.
1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில், முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றார். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.
இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இறுதியில் அமிர்தலிங்கம், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகவேண்டி ஏற்பட்டது.