கிப்பன் பண்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.
பொருளடக்கம் |
[தொகு] கிப்பன் விளைவு
பொதுவாக, விலை நெகிழ்திறன் (price elasticity) நுகர்தேவையுடன் (demand) எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன் பண்டங்கள் நேர்மறை விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச் சூழல்களின் பொருளியல் மாதிரியை இயற்றியவர் சர்[1] இராபர்ட்டு கிப்பன் என ஆல்பிரடு மார்சல் என்பவர் தனது பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ் ("பொருளியல் கோட்பாடுகள்") என்ற நூலில் தெரிவித்துள்ளார்.[2] கிப்பனின் நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு கிப்பன் விளைவு என்றும் இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
[தொகு] இயங்கமைவு
இவ்விளைவை விளக்குவதற்கு மார்சல் எடுத்துக்கொண்ட முன்மாதிரி வெகுவான ஏழ்மைநிலை உள்ள சூழலில் அன்றாட உணவில் பயன்படும் (பொதுவாகத் தரம் குன்றிய) தானியங்களாவன. இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் வாங்குதிறன் குன்றுகிறது. ஏற்கெனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் வாங்குதிறன் குன்றிய சூழலில் நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் நுகர்வு குறைகிறது. இதனால் விளையும் ஊட்டக்குறைவை ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக நுகர்கின்றனர். இதன்மூலம் விலை ஏறிவரும் ஒரு பொருளின் நுகரப்படும் அளவும் வழக்கத்திற்கு மாறாக ஏறுகிறது.
[தொகு] பகுப்பாய்வு
ஒரு பண்டத்தின்மீது கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று நிலைமைகள் ஒரு சூழலில் அமைந்திருக்க வேண்டும்.
- அப்பண்டம் ஒரு இழிவுப் பண்டமாக இருத்தல் வேண்டும்.
- அப்பண்டத்துடன் பயன்பாட்டில் நெருங்கிய பிரதியீட்டுப் பண்டங்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
- மேலும், தெரிவு செய்யப்பட்டுள்ள பண்டம் ஒரு வாங்குநரின் வருவாயிலிருந்து பெரும்பகுதி செலவிற்குக் காரணமாக அமைய வேண்டும்.
முதலாவது தேவையை "பிரதியீட்டுப் பண்டங்களிடமிருந்து போட்டி மூலம் விலை அமையாமல் வாங்குநரின் வருவாயின் அடிப்படையில் மட்டும் அமைகின்றபடி ஒரு பண்டத்தின் மதிப்பு மற்றும் தரம் மிக இழிநிலையில் இருத்தல்" என்று மாற்றியமைத்தால் அதுமட்டுமே போதுமான சூழல்கூறாகும்.
இந்நிலையை அருகே தரப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது. முதலில் ஒரு நுகர்பவருக்கு தமது வருவாயை Y என்ற பண்டத்தின்மீது அல்லது X என்ற பண்டத்தின்மீது செலவு செய்யும் வாய்ப்புள்ளது. இத்தெரிவுநிலையில் விலைக்கேற்ப நுகர்தேவை மாறுதல் MN என்ற கோட்டின்மூலம் காட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை நுகர்பவரின் வரவு-செலவுக் கட்டுப்பாடு எனலாம். I0 என்று படத்தில் பெயரிடப்பட்டுள்ள இணைபயன் வளையீ காட்டும் நுகர்வோனின் முன்னுரிமைகளிற்கேற்ற கொள்முதல் கலவையைக் A என்ற புள்ளி குறிக்கிறது.
X என்ற பண்டத்தின் விலையில் இறக்கம் ஏற்படும்போது, இரு விளைவுகள் ஏற்படுகின்றன. குறைந்த விலை X பண்டத்திற்கு சார்பாக ஒப்பீடு விலைகளை இறுதி செய்கிறது. இவ்விளைவை பிரதியீட்டு விளைவு என்பர். இவ்விளைவு, வரைபடத்தில் A என்ற புள்ளியிலிருந்து B என்ற புள்ளிக்கு இணைபயன் வளையீ நகர்வதின்மூலம் எடுத்துக்காட்டப் படுகிறது. B என்ற புள்ளி முந்தைய வளைவின் ஒரு சுழற்சி மையமாகும்.
அதே நேரத்தில், விலைக்குறைப்பு நுகர்பவரின் வாங்குதிறனைக் கூட்டுகிறது. வரவு-செலவுக் கட்டுப்பாடு வெளிநோக்கி இவ்வாறு நகர்வதை வருவாய் விளைவு என்பர். வரைபடத்தில் MP என்று பெயரிடப்பட்டுள்ள புள்ளிகளாலான கோடு இதைக் காட்டுகிறது. P என்பது புதிய விலையினால் வகுக்கப்பட்ட வருவாயாகும்.
முதலாவதான பிரதியீட்டு விளைவு X என்ற பண்டத்தி நுகர்தேவையை Xa எனும் புள்ளியிலிருந்து Xb எனும் புள்ளிவரை ஏற்றுகிறது. அதே வேளையில், இரண்டாவதான வருவாய் விளைவு அதை Xb இலிருந்து Xc என்ற புள்ளிக்கு இறக்குகிறது. நிகர விளைவாக X பண்டத்தின் நுகர்தேவை அளவு Xa இலிருந்து Xc ஆகக் குறைகிறது. பிரதியீட்டு விளைவைக் காட்டிலும் கூடுதலாகத் தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு வருவாய் விளைவு இருக்கும் சூழலில் உள்ள பண்டம் கிப்பன் பண்டம் ஆகும்.
[தொகு] நிகழ்வாழ்வில் எடுத்துக்காட்டுக்கள்
வெகுநாட்களாக 1845 முதல் 1849 வரை ஏற்பட்ட அயர்லாந்து பஞ்சத்தின்போது உருளைக் கிழங்கின் விலை ஏறிய வண்ணமிருந்தும் கொள்முதலில் ஏற்றமிருந்ததை எடுத்துக்காட்டாக சுட்டி வந்தனர். ஆனால், இது தவறு என 1999-ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்வின் ரோசன் என்பவர் தனது முரணொத்த உருளைக்கிழங்கு மெய்ம்மைகள் ("Potato paradoxes") என்ற தலைப்பிலான கட்டுரையில் நிறுவினார்.[3] அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
த நேசன் (The Nation) என்ற இதழில் பணிபுரிந்த சாஷா அப்ரம்ஸ்கி என்பவர் 2005-ல் நிகழ்ந்து கொண்டிருந்த பெட்ரோலின் செங்குத்தான விலையேற்றத்தின்போது கிப்பன் விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார். விலையேற்றத்தினால் பெட்ரோலுக்கு தங்கள் வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடும் ஏழை அமெரிக்கர்களால் தங்கள் வண்டிகளின் பராமரிப்பிற்காகவும், பழுது நீக்கத்திற்காகவும் தேவையான அளவு செலவு செய்ய முடியாதென்றும் அதனால் அவற்றின் பெட்ரோல் தேவை கூடுமென்றும் அவர் ஒரு சூழலை முன்வைத்தார். இச்சூழலில் பெட்ரோல் ஒரு இழிவுப் பண்டமாகவும், பராமரிப்பு ஒரு பிரதியீட்டுப் பண்டமாகவும் அமையுமென அவர் கூறியிருந்தார்.[4] ஆனால் அவரது இந்த முன்கூற்றின் சார்பாக போதிய அளவு தரவுகள் அமையவில்லை.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Royal Society Citation
- ↑ Marshall, Alfred [1920]. “Value and Utility”, Principles of Economics. London: Macmillan and Co., Ltd., 17. Retrieved on 2006-07-20. “[A]s Sir R. Giffen has pointed out, a rise in the price of bread makes so large a drain on the resources of the poorer labouring families and raises so much the marginal utility of money to them, that they are forced to curtail their consumption of meat and the more expensive farinaceous foods: and, bread being still the cheapest food which they can get and will take, they consume more, and not less of it.”
- ↑ செர்வின் ரோசன் (1999). Potato Paradoxes. Journal of Political Economy 107 (6): S294-S313.
- ↑ சாஷா அப்ரம்ஸ்கி (அக்டோபர் 2005). Running on fumes ("புகையில் ஓடுதல்"). த நேசன் (அக்டோபர் 17, 2005): 15-19.
பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - common good - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம் durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப் பண்டம் - மூலதனப் பண்டம். |