கிரந்த எழுத்துக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி). இந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியவையே ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது[1]
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.
[தொகு] கிரந்த எழுத்து வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்து முறையிலிந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் தமிழ் எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( மணிப்பிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை வட்டெழுத்திலும் வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான் [2] கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி[3], முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி தேவநாகரியில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] கிரந்த எழுத்துமுறையின் இன்றைய நிலை
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் இன்றும் கூடக் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொறுத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது[4].