மணிப்பிரவாளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இரத்தினம்-பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். சோழப் பேரரசுக் காலத்திலும் அதன் பின்னரும், இன்றைய கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த தமிழ் நாட்டில் சமஸ்கிருதச் செல்வாக்கு மிகுந்திருந்தது. சமஸ்கிருத மொழி உயர்வானதாகவும், இறைவனுடைய மொழியாகவும் கற்பிக்கப்பட்ட காலம் அது. தமிழில் சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதுவது உயர் நடையாக எண்ணப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பின்னர், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதிய இராமானுஜருடைய ஆக்கங்கள் மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருந்தன. சோழர்காலத்தில் சமஸ்கிருதத்தின் வழி புகுந்த சமயக் கருத்துருக்களும், தமிழில் எழுந்த சமஸ்கிருதத் தழுவல் நூல்களும் இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன.
அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.
[தொகு] எடுத்துக்காட்டு
அக்காலத்திய மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாக "உபதேசரத்னமாலை" என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் கீழே காணலாம்.
- மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்.
[தொகு] மணிப்பிரவாளமும் மலையாளத் தோற்றமும்
கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டு என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் மத்தியில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், சமஸ்கிருதச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் சமஸ்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமஸ்கிருதம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.