சிறுத்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிறுத்தை (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.
பொருளடக்கம் |
[தொகு] உடல் அமைப்பு
சிறுத்தை இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறுத்தையின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிறுத்தை 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிறுத்தைகள் பெண் சிறுத்தைகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு சிறுத்தையைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.
[தொகு] வசிப்பிடம்
சிறுத்தை மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக் மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.
[தொகு] உணவுப்பழக்கம்
சிறுத்தை வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.
[தொகு] வாழ்க்கைமுறை
பெண் சிறுத்தைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிறுத்தைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிறுத்தையின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிறுத்தைக் குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.
சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறுத்தை இப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.