திராவிடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] திராவிட மொழிகள்
திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.
[தொகு] சொல்லின் தோற்றம்
திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர். பெரும்பாலும் வெளிநாட்டவரான அக்கால ஆய்வாளர்கள், சமஸ்கிருதப் பின்னணியுடனேயே திராவிட மொழி ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் ஆதலால், இந்த எடுகோள் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. வேறு சில ஆய்வாளர்கள், முக்கியமாகத் தமிழ் நாட்டினர், தமிழ் என்ற சொல் மருவியே திரவிட என்னும் சமஸ்கிருதச் சொல் உருவானதாக வாதிடுவர். இவ் விடயத்தில் ஒத்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாகத் தக்க சான்றுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் வெவ்வேறு சாராரைக் குறிப்பன என்றும் கனகசபைப்பிள்ளை போன்றவர்கள் கருதினார்கள். எனினும் இக்கொள்கைக்குப் போதிய ஆதரவு இல்லை.
[தொகு] திராவிட இனம் பற்றிய கருத்துரு
19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால், பொதுவாக கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர, ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.
திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.
[தொகு] திராவிட இனத் தோற்றம்
திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் இல்லாததால், இது தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இது, பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம்[1] என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர். சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
[தொகு] இன வகைப்பாடு
மானிடவியலாளர், இந்தியர்களை, குறிப்பாக, திராவிடர்களை, இன அடிப்படையில் வகைப்படுத்துவது தொடர்பில் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளனர். ஒரு வகைப்பாட்டின்படி, திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது.
[தொகு] பரம்பரையியல் வகைப்பாடு
மக்களை இனங்களாக வகைப்படுத்துவது தொடர்பான பரம்பரையியல் நோக்குப் பெருமளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான தற்கால மானிடவியலாளர், பரம்பரையியல் அடிப்படையில் இனங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை[2]. ரிச்சர்ட் லெவொண்டின் (Richard Lewontin) என்பவர், ஒவ்வொரு மனித மரபணுவும் இன்னொன்றிலிருந்து வேறுபடுவதை எடுத்துக்காட்டி, இனங்களை வரையறை செய்வதில் பரம்பரையியல் பயன்படாது என்று கூறுகிறார்[3]. எனினும் பல ஆய்வாளர்கள், பரம்பரையியல் முறைகளைப் பயன்படுத்தி இனங்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயன்றுள்ளனர். கவல்லி-ஸ்ஃபோர்சா (L.L. Cavalli-Sforza) என்பவர், எல்லா இந்தியர்களுமே பரம்பரையியலின் அடிப்படையில் காக்கேசியர்களே (Caucasian) என்றார்[4]. லின் பி. ஜோர்டே (Lynn B Jorde), ஸ்டீபன் பி. வூடிங் (Stephen P Wooding) போன்றவர்கள், தென்னிந்தியர்களைப் பரம்பரையியல் அடிப்படையில், ஐரோப்பியர்களுக்கும், கிழக்கு ஆசியர்களுக்கும் இடையில் வைத்தார்[5][6][7]. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் சில, உயிரியல் ரீதியான திராவிட இனம் என்ற கருத்துரு தொடர்பில் ஐயப்பாடுகளை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது.
[தொகு] குறிப்புகள்
- ↑ குமரிக் கண்டம், தெற்கில் கடலையும், மேற்கில் மடகாஸ்கர் தீவையும், கிழக்கில் சாவகத்தையும், வடக்கில் விந்திய மலையையும் எல்லையாகக் கொண்டிருந்தது என்றனர்.
- ↑ Bindon, Jim. அலபாமா பல்கலைக்கழகம். மானிடவியற் பிரிவு. ஆகஸ்ட் 23, 2006. <http://www.as.ua.edu/ant/bindon/ant275/presentations/POST_WWII.PDF#search=%22stanley%20marion%20garn%22>.
- ↑ Lewontin, R.C. Biology as Ideology The Doctrine of DNA. Ontario: HarperPerennial, 1991.
- ↑ Sailer, Steve. Interesting India, Competitive China. xbiz. இணைப்பு 2006-09-12 அன்று அணுகப்பட்டது.
- ↑ Jorde, Lynn B Wooding, Stephen P. Nature Genetics. Department of Human Genetics. 2004. <http://www.nature.com/ng/journal/v36/n11s/full/ng1435.html>.
- ↑ Bamshad, M.J. et al. Human population genetic structure and inference of group membership. Am. J. Hum. Genet. 72, 578−589 (2003).
- ↑ Rosenberg, N.A. et al. Genetic structure of human populations. Science 298, 2381−2385 (2002).
[தொகு] வெளியிணைப்புகள்
- இஸ்லாத்துக்கு முற்பட்ட சிந்துவெளியின் மக்களும், மொழிகளும் (ஆங்கிலத்தில்)
- திராவிடர் - வி.சிவசாமி (தமிழில்)