முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வில்லியம் நெவின்ஸ் அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எனப் பரவலாக அறியப்பட்டவர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அவர்கள். இவர் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். பிற்காலத்தில் இந்துக் கல்லூரிகள் என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கிளை பரப்பி வெற்றிகரமாக இயங்கிவந்த, இன்னும் முன்னணிக் கல்வி நிறுவனங்களாக இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு வித்தாக அமைந்த உள்ளூர்ப் பாடசாலையை (The Native Town High School) உருவாக்கியவர் இவரே.
பொருளடக்கம் |
[தொகு] ஆரம்பகாலம்
இவர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை என்னும் ஊருக்கு அருகிலுள்ள சங்குவேலி என்னுமிடத்தில் 1820 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 12 ஆம் வயதில் அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனால் வட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டுவந்த செமினரியில் (Seminary) சேர்ந்து கல்விகற்றார். ஒரு இந்துவான இவர் இக்காலத்திலேயே செமினரி நிபந்தனைகளுக்கு அமைய வில்லியம் நெவின்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தமிழ், ஆங்கிலம் தவிர வடமொழியையும் கற்றார். அக்காலத்தில் கணிதத்தில் இவர் சிறந்த திறமைசாலியாக இருந்ததாகத் தெரிகிறது.
[தொகு] தொழில்
1840ல் கல்வியை நிறைவு செய்துகொண்ட இவர் செமினரியிலேயே பணியில் அமர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் அங்கே மொழிபெயர்ப்பு வேலைகளில் ஏடுபட்டிருந்த அவர் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1855ல் புகழ் பெற்ற பலரை உருவாக்கிய வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டதைத் தொடர்ந்து இவர் தமிழ் நாட்டுக்குச் சென்றார். அங்கே, பின்னர் வின்ஸ்லோ அகராதி எனப் பெயர்பெற்ற தமிழ் அகராதி தாயாரிக்கும் வேலையில் ஏடுபட்டிருந்த வின்ஸ்லோ என்பவருக்கு உதவியாக இருந்தார். அவருடன் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர். 1860ல் யாழ்ப்பாணத்துக்கு மீண்டார்.
1860 ஆம் ஆண்டில் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்ததும், யாழ்ப்பாணத்தின் முதல் பாடசாலையுமான ஆங்கிலப் பாடசாலையான மத்திய கல்லூரியில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். 26 ஆண்டுகாலப் பணிக்குப் பின் 1886 ல் அக் கல்லூரியை விட்டு விலகினார். நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. அடுத்த ஆண்டிலேயே மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்த கட்டிடமொன்றில் உள்ளூர்(?) நகர உயர் பாடசாலை (The Native Town High School) என்ற பெயரில் பாடசாலையொன்றை உருவாக்கினார். 1889 ல் இப் பாடசாலையை வழக்கறிஞராக இருந்த நாகலிங்கம் என்பவர் பொறுப்பேற்றபின்னர் அதே ஆண்டில் சிதம்பரப்பிள்ளையவர்கள் காலமானார்.
[தொகு] உள்ளூர் நகர உயர் பாடசாலையும், இந்துக்கல்லூரியும்
சிதம்பரப்பிள்ளையவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை 1890ல் அக்காலத்தில் இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்துப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வந்த சைவபரிபாலன சபையிடம் ஒப்படைக்கப் பட்டது. இப் பாடசாலை பின்னர் பொருத்தமான வேறிடத்துக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரி எனப் பெயர் பெற்றது.