இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், தொடங்கப்பட்டது. 1850 களில் இது பற்றிய எண்ணம் உருவானபோதும், 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இலேயே, கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் நீளமான பாதையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894 இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன.
[தொகு] தொடர்வண்டிப் போக்குவரத்து வலையமைப்பு
இலங்கையின் தொடர்வண்டிப் பாதைகள் அனைத்தும், தலைநகரான கொழும்பில் இருந்து பல்வேறு நகரங்களை நோக்கி விரிந்து செல்கின்றன. இவ் வலையமைப்பானது ஒன்பது பாதைகளைக் கொண்டுள்ளது. இவை, வடக்கில் காங்கேசன்துறை, தலைமன்னார் ஆகிய இடங்களிலும், கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும், மலையகப் பகுதியில், மாத்தளை, பதுளை ஆகிய இடங்களிலும், தெற்கில் மாத்தறையிலும் மேற்கில் புத்தளத்திலும் முடிவடைகின்றன. இன்னொரு பாதை அவிசாவளை வரை செல்கின்றது.
இவற்றில் வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும் பாதை பொல்காவலை வரை வடகிழக்கு நோக்கிச் செல்கின்றது. பொல்காவலை ஒரு சந்திப்பு ஆகும். இங்கிருந்து ஒருபாதை கிழக்கு நோக்கி மத்திய மலை நாட்டுக்கும், இன்னொன்று வடக்கு நோக்கியும் செல்கிறது. மலைநாடு நோக்கிச் செல்லும் பாதை கண்டிக்கு அருகில் உள்ள பேராதனைச் சந்திப்பில் இரண்டாகப் பிரிந்து ஒன்று மாத்தளைக்கும் மற்றது பதுளைக்கும் செல்கின்றன.
பொல்காவலையில் இருந்து வடக்கே செல்லும் பாதை மாகோ சந்திப்பிலிருந்து இரண்டு பாதைகளாகப் பிரிந்து ஒன்று கிழக்கு மாகாணத்துக்கும் அடுத்தது வடமாகாணம் நோக்கியும் செல்கின்றன. கிழக்கு நோக்கிச் செல்லும் பாதை, கல்லோயா சந்திப்பில் பிரிந்து, வடக்கு நோக்கித் திருகோணமலைக்கும், தெற்கு நோக்கி மட்டக்களப்புக்கும் செல்கின்றன. வட மாகாணம் நோக்கிய பாதையில் மதவாச்சி என்னும் இடத்திலுள்ள சந்திப்பில் ஒரு பாதை மேற்குப் பகுதியை நோக்கித் தலைமன்னார் வரை செல்கிறது. மதவாச்சியிலிருந்து வடக்கே செல்லும் பாதை வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாகக் காங்கேசந்துறையை அடைகின்றது. இந்த வடக்கு நோக்கிய பாதை உள்நாட்டுப் போரின் விளைவாக வவுனியாவுக்கு அப்பால் அகற்றப்பட்டுவிட்டது.
கொழும்பிலிருந்து தென்பகுதி நோக்கிச் செல்லும் கரையோரப் பாதை இந்து சமுத்திரக் கரையோரமாகச் சென்று காலியூடாக மாத்தறையை அடைகின்றது. மேற்குக் கரையோர நகரமான புத்தளம் நோக்கிச் செல்லும் பாதை, வடக்கே செல்லும் பாதையில் உள்ள ராகம என்னும் இடத்திலிருந்து நீர்கொழும்பு ஊடாகப் புத்தளத்தை அடைகின்றது.