நகர அரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நகர அரசு என்பது, நகரம் ஒன்றினால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்படுகின்ற பகுதியொன்றைக் குறிக்கும். வரலாற்று அடிப்படையில் நகர அரசுகள், பெரும்பாலும், பெரிய பண்பாட்டுப் பகுதிகளின் கூறுகளாக இருந்து வந்தன. பண்டைய கிரேக்கம், போனீசியா, அஸ்ட்டெக்ஸ், மாயன், பட்டுப்பாதையை அண்டிய மத்திய ஆசியப் பகுதிகள், மறுமலர்ச்சிக் கால இத்தாலி போன்றவற்றின் பண்பாட்டுப் பரப்பினுள் அமைந்திருந்த நகர அரசுகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
பண்டைக்காலத்தில் நகர அரசுகள் பரவலாகக் காணப்பட்டன. இந் நகர அரசுகள் இறைமை உள்ளனவாக இருந்தபோதிலும், பல நகர அரசுகள், முறையாகவோ, முறைசாராமலோ வேறு நகர அரசுகளோடு இணைந்து ஒரு அரசனின் கீழ் குழுக்களாகச் செயற்பட்டு வந்தன. அக்காலத்தில் ஆக்கிரமிப்பு மூலம் பகுதிகளை அடிப்படுத்திப் பேரரசுகள் உருவானபோதும், பல சந்தர்ப்பங்களில், நகர அரசுகள், பரஸ்பர பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அமைதி வழியில் இணைந்தும் பேரரசுகள் உருவாகியுள்ளன. பெலோபொனேசியன் குழுமம் (Peloponnesian League) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
மத்திய காலப் பகுதியில் இன்றைய, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா ஆகிவை இருக்கும் பகுதிகளில் நகர அரசு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கியது. இவற்றுட் பல ஒன்றிணைந்து, ஹன்சியாட்டிக் குழுமத்தை (Hanseatic League) உருவாக்கியிருந்தன. இக்குழுமம் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் வணிகம் தொடர்பில் முக்கிய சக்தியாக விளங்கியது.