பொம்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொம்மை, ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். பொதுவாக, பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் பெரியவர்களும் வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகளும் கூட பொம்மைகளுடன் விளையாடுவதை காணலாம். பொம்மையாக பயன்படுத்துவதற்காகவே பல விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்றாலும், வேறு முதன்மைப் பயன்பாடு உடைய பொருட்களும் பொம்மை போல் பயன்படுத்தப்படுவதை காணலாம். சில பொம்மைகள், பொம்மை விரும்பிகளால் சேகரிப்பதற்காக மட்டுமே இருக்கின்றன. அவற்றை விளையாடப் பயன்படுத்துவது இல்லை.
பொம்மைகள், முன்வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன.
உலகை அறிந்து கொள்ளவும் வளர்ச்சி அடையவும் விளையாட்டுகளும் பொம்மைகளும் மிகவும் உதவுகின்றன. குழந்தைகள், பொம்மைகளை கொண்டு தங்களை அறிந்து கொள்ளவும், தங்கள் உடல் வலுவைக் கூட்டவும், வினை - விளைகளை அறியவும், தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், பெரியவர்களாகும் போது தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். பெரியவர்கள், சமூகத் தொடர்புகளை பெருகிக்கிக் கொள்ளவும், குழந்தைகளுக்கு கற்றுத் தரவும், தங்கள் சிறுவயதில் கற்ற பாடங்களை நினைவூட்டிக் கொள்ளவும், மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கவும், அன்றாடம் பயன்படுத்தாமல் போகக் கூடிய திறன்களில் பயிற்சி எடுக்கவும், தங்கள் வாழிடத்தை அழகூட்டவும் பொம்மைகளை பயன்படுத்துகின்றனர்.
வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றை தாண்டி, பொம்மைகளும் அவை பயன்படுத்தப்படும் முறைகளும் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை உருவாக்குகின்றன.