மண்வெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மண்வெட்டி என்பது மண்ணை வெட்டப் பயன்படும் ஓர் வேளாளர் கருவி ஆகும். இது சற்றே வளைந்த செவ்வகமான வடிவில் மாழையால் (உலோகத்தால்) செய்த வெட்டும் தகடுடன் (அல்லது அலகு) கைப்பிடி பொருத்திய கருவி ஆகும். இதனைப் பயன்படுத்த கைப்பிடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, கால்களை அகட்டி வைத்துக்கொண்டு குனிந்து வெட்ட வேண்டும். பெரும்பாலும் நீர் பாய தாழ்வான கால்வாய்கள் போன்றவற்றையும் சிறு குழிகளையும் வெட்டவும், களை மிகுந்த பகுதிகளை வெட்டவும் பயன் படும். கட்டிட வேலைகளில், பைஞ்சுதை (சிமென்ட்டு), மணல் இவைகளை சேர்ந்து கலக்கி மருக்கவும் பயன்படுகின்றது. மண்ணை அள்ளிப் போட்டு குழியை நிரப்பவும் பயன்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக இன்றும் பயன்படுகிறது. இந்நாடுகளில் தோட்டச் செய்கையில் இதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாகும்.
[தொகு] அமைப்பு வேறுபாடுகள்
மண்வெட்டிகளின் பயன்பாட்டைப் பொறுத்து அவற்றின் வடிவமைப்புக்களிலும் வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக வெட்டும் தகடு, கைப்பிடி என்பவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பின்பகுதி அகன்றும், குறுகலான முன்பகுதி வளைவாகவும் அமைந்த வெட்டும் தகடுகளுடன் கூடிய மண்வெட்டிகள் வாய்க்கால்கள் வெட்டுவது, நீர் பாய்ச்சுவது போன்ற தோட்ட வேலைகளுக்கு ஏற்றது. பொதுவாக இதன் கைப்பிடி நீளமாக அமைந்திருக்கும். செவ்வக வடிவாகவும் நேரான முன்பகுதியுடனும் கூடிய வெட்டும் தகடுகள் கொண்ட மண்வெட்டிகள் கட்டிட வேலைகளிலும், சாலை அமைப்பு வேலைகளிலும் பயன்படுகின்றன.யாழ்ப்பாணத்தில் முதல் வகை மண்வெட்டியைத் தோட்ட மண்வெட்டி என்றும், மற்றதைத் தெருவேலை மண்வெட்டி என்றும் அழைப்பார்கள்.
வெட்டும் தகட்டைக் கைப்பிடியுடன் பொருத்தும் விதத்திலும் மண்வெட்டிகளிடையே வேறுபாடுகள் உள்ளன. சிலவகை மண்வெட்டிகளில் வெட்டும் தகட்டின் பின்பகுதியில் உருளை வடிவான துவாரம் கொண்ட அமைப்பு இருக்கும். இதனுள் கீழ் முனை அகன்றும் மேல் முனை ஒடுங்கியும் உள்ள கைப்பிடி செலுத்தப்பட்டு இறுக்கப்படும். வேறு சில வகைகளில், வெட்டும் தகட்டுடன் பொருத்தப்பட்டுள்ள வளைந்த இரும்புக் கம்பியொன்று கைப்பிடியின் கீழ் முனையில் உள்ள துவாரம் ஒன்றினூடு செலுத்தப்பட்டுப் பொருத்தப்படும், கைப்பிடி நெடுக்கு வாக்கில் பிளவுபடுவதைத் தடுப்பதற்காக கைப்பிடியில் பொருத்தும் இடத்திற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு இரும்புப் பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும்.