ஹேபர் செயல்முறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹேபர் செயல்முறை (Haber Process) அல்லது ஹேபர்-பொஸ்ச் செயல்முறை என்பது, நைதரசனும் (நைட்ரஜன்), ஐதரசனும் (ஹைட்ரஜன்) சேர்ந்து அமோனியா உருவாகும் வேதியியல் வினையைக் குறிக்கும்.
நைதரசன் வளிமமும் (N2), ஐதரசன் வளிமமும் (H2) இரும்பை வினை ஊக்கியாகப் (catalyst) (Fe3+) பயன்படுத்தி வினையுறுகின்றன. அலுமினிய ஆக்சைடும் (அலுமீனியம் ஒட்சைட்டும்) (Al2O3), பொட்டாசிய ஆக்சைடும் (பொட்டாசியம் ஒட்சைட்டும்) (K2O) ஊக்கிமுடுக்கியாகப் (promoters) பயன்படுகின்றன. இவ் வேதியல் வினை 250 வளிமண்டல அழுத்தத்திலும் (அமுக்கத்திலும்), 450-500°C வெப்பநிலையிலும் நிகழ்த்தி 10-20% விளைவைப் பெறுமாறு இயக்கப்படுகின்றது.
- N2(g) + 3H2(g) → 2NH3(g) + ΔH ...(1)
இங்கே, ΔH என்பது வினைவெப்ப ஆற்றல் ஆகும். ஹேபர் செயல்முறைக்கு இது 25°C வெப்பநிலையில் -92.4 கிலோ ஜூல்/மூல் (kJ/mol) ஆகும்.
இச்செயல்முறை முதலில் 1908 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் BASF என்னும் நிறுவனத்தில் பணி புரிந்தபோது, இம்முறையை வணிகநோக்கில் வெற்றிகரமாக ஆக்கினார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மானியர்கள் இம் முறையைப் பயன்படுத்தி முதன் முதலாகத் தொழில் முறையில் உற்பத்தி செய்தனர்.