எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு (ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர். இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார். அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை அணுவியல் தந்தை எனவும் போற்றுவர்.
[தொகு] வாழ்க்கை வரலாறு
ரதர்ஃவோர்டு அவர்கள் நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் (தற்பொழுது பிரைட்வாட்டர் என அழைக்கப்படுகின்றது) என்னும் இடத்தில் பிறந்தார். அங்கே நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரிக் கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். 1895ல் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்ற பின்பு, இரண்டாண்டுகள் மின்னியல் துறையில் ஆய்வுகள் செய்தபின்பு, மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காவண்டிஷ் செய்முறை ஆய்வகத்தில் (பரிசோதனைச் சாலையில்) சேர்ந்து 1895 முதல் 1898 வரை ஆய்வு செய்தார்.
1898ல் ரதர்ஃவோர்டு அவர்கள் கனடாவில் மான்ட்ரியால் நகரில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) இயற்பியல் துறைக்குத் தலைவராக அமர்த்தப்பெற்றார். இவர் கனடாவில் இருந்தபொழுது செய்த ஆய்வின் பயனாக 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். சில அணுவில் இருந்து எழும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்களானவை ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றது என்று அறிந்தார். இதன் பயனாக கதிரியக்க அணுவின் வாழும் அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார்.