புளோரன்ஸ் நைட்டிங்கேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சி பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு தரவியலாளாருமாவார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்புக்கள்
[தொகு] ஆரம்பகால வாழ்க்கை
பிரிட்டிஷ் செல்வக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794- 1875), தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880). தாதியர் சேவையில் ஈடுபட விரும்பிய புளோரன்சுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லை. தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது.
1846ம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.
தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில் ரோமில் சிட்னி ஹேர்பேர்ட் என்பவரைச் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். இவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர்.
1851ம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.
[தொகு] க்ரிமியன் போர்
ரஷ்யப் பேரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 1854 - 1856ம் ஆண்டு நடந்த க்ரிமியன்போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.
புளோரன்ஸ் நைற்றிங்கேலும் 38 தாதியரும் ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்த போது அங்கே போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையைச் சுத்தப்படுத்தினர்.
மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.
[தொகு] நாடு திரும்பல்
போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் கருதப்பட்டார். சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.
விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிற்கால வாழ்க்கையும் பணிகளும்
துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன.
இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. (தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது.
இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் 139 பக்கங்களுடைய புத்தகமாக அச்சிடப்பட்டது. இப்புத்தகமே நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்லறிமுகமாக இந்நூல் கருதப்படுகிறது.
தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாயிருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
1869இல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியைத் தோற்றுவித்தார்.
1882ம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர்.
புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார்.
1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.
க்ரொனிக் வடீக் சின்ட்ரோம் (Chronic Fatigue Sydnrome)(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவர்க்கு இருந்ததாக எண்ணப்படுகிறது. இவரது பிறந்த நாள் இநநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் தினமாக உள்ளது.
1896ம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.
[தொகு] தரவியல் பங்களிப்புக்கள்
சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் தரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் தரவியலை பெரியளவில் பயன்படுத்தினார்.
தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.
இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார்.
1858 இல் பதவியேற்றதன் மூல அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார்.
[தொகு] இலக்கியத்துக்கும் பெண்ணியக்கத்திற்குமான பங்களிப்புக்கள்
மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணியத்தில் முக்கியமான ஒருவருமாவார்.
1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை "சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (Tகெ Cஔசெ) எனும் பெண்ணிய வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.
கசான்ட்ரா, கல்வி கற்றிருந்த போதும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் தாய் மற்றும் அக்கா நடத்திய சோர்வான வாழ்க்கை போன்று பெண்கள் அதீத பெண்மையால் கையாலாகாதவர்களாய்ப் ஆக்கப்படுவதைக் கண்டிக்கிறது.சமூக சேவைக்காகா அவர்களது வசதியான வாழ்வை புளோரன்ஸ் நிராகரித்தார். இவ்வாக்கம் தனது யோசனைகள் மக்களால் உள்வாங்கப்படாது போய்விடுமோ என்ற புளோரன்சின் கவலையைப் பிரதிபலிக்கிறது. கசான்ட்ரா என்ப்வள் அப்பலோவின் பெண்பூசாரியாவாள். தெய்வீக தீர்க்கதரிசனம் பெறுபவளாயினும் இவளது எச்சரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை.
[தொகு] சாதனையும் நினைவு கூரலும்
பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை & செயற்பாடுகள் உடையவராயிருந்தார்.
நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.
உலக தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.
KLM விமானசேவை தங்கள் MD-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.
இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.
ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு 'பெட்சைட் புளோரன்ஸ்' (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.
புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது.