கஸ்பியன் கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

காஸ்ப்பியன் கடல் உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரியாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே. 317,000 சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இவ் ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 மீட்டர் ((3,363 அடி) ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை (உப்புத்தன்மை) கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது.
இவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது.
இவ்வேரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம் மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர அறிவியலாளர் முயல்கின்றனர்.