பேரரசுவாதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேரரசுவாதம் என்பது, ஒரு பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், ஒரு வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும். இது ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துவது மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது. இச் சொல், அடக்கப்பட்ட நாடு, தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விபரிக்கவே பயன்படுகின்றது.
"பேரரசுவாதக் காலம்" ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது. பேரரசுவாதம் என்பது, தொடக்கத்தில், 1500 களின் பிற்பகுதியில், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆபிரிக்கா, அமெரிக்காக்கள் நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது.
முதலாளித்துவம், புதிய சந்தை வாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காகப் பேரரசு வாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இது முதலாளித்துவத்தின் இறுதியானதும் உயர்மட்ட நிலையும் ஆகுமென லெனின் வாதித்தார். தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு வெளியிலான முதலாளித்துவத்தின் அவசியம் கருதிய விரிவாக்கம் பற்றிய கொள்கையை ரோசா லக்சம்பர்க்கும் தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட்டும் (Hannah Arendt) ஏற்றுக்கொண்டனர்.