ப்ராஜெக்ட் டைகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ப்ராஜெக்ட் டைகர் என்பது இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையைப் பேணும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம் ஆகும்.இத்திட்டம் 1973 - 74ல் துவங்கப்பட்டது.இதற்கெனத் தனியான சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு புலிகள் வாழ்வதற்கான இயற்கையான சூழ்நிலை பேணப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] தோற்றுவாய்
1969ல் தில்லியில் நடந்த ஐ.யூ.சி.என் பொதுக்குழுக் கூட்டத்தில் அருகிவரும் கானகப்பரப்பு குறித்தும், பல கானுயிர்கள் அழியும் தறுவாயில் இருப்பது குறித்தும் கவலைக்குரல் எழுப்பப்பட்டது.1970ல் புலி வேட்டை தேசிய அளவில் தடை செய்யப்பட்டது.இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நாற்பதாயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது.1972ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள்தொகைக் கணக்கெடுப்பில் 1872 புலிகளே எஞ்சி இருந்தது தெரியவந்தது.1972ல் கானுயிர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.புலிகளைப் பேணுவதற்கு சூழியல் அணுகுமுறை கொண்ட ஒரு திட்டத்தை வடிக்க செயலாக்கக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
[தொகு] திட்டக்கூறுகள்
புகலிடங்கள் "கருப்பகுதி-இடைப்பகுதி" உத்தியின் (Core - buffer strategy) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன.கருப்பகுதி என ஒதுக்கப்பட்ட பரப்பில் எவ்வித மனித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டது.இடையகப் பரப்பில் பேணுதல் நோக்கிலான நிலப் பயன்பாடு மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு புகலிடத்திற்கும் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையிலான நிர்வாகத் திட்டம் வகுக்கப்பட்டது:
- கருப்பகுதியில் மனிதனால் நிகழ்த்தப்படும் சுரண்டல்களையும் இடையூறுகளையும் அறவே களைதல்.இடையகப் பகுதியில் மனித நடவடிக்கைகளை முறைப்படுத்தல்.
- சூழியல் அமைப்புக்கு மனிதனாலும் பிற குறுக்கீடுகளாலும் நேர்ந்த சேதத்தைச் செப்பனிடும் வகையில் மட்டும் வாழிட மேலாண்மையை மட்டுப்படுத்தி சூழியல் அமைப்பு தன் இயல்பு நிலைக்கு மீள உதவுதல்
- காலப்போக்கில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளல்
துவக்கத்தில் இவ்வாறான 9 புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவையாவன:
- மானஸ் (அஸ்ஸாம்)
- பாலமவ் (பிஹார்)
- சிமிலிபால் (ஒரிசா)
- கார்பெட் (உத்தராஞ்சல்)
- கன் ஹா (மத்தியப் பிரதேசம்)
- மேல்காட் (மஹாராஷ்ட்ரா)
- பந்திப்பூர் (கர்நாடகா)
- ரந்தம்போர் (ராஜஸ்தான்)
- சுந்தரவனம் (மேற்கு வங்காளம்)
இந்த 9 புகலிடங்களும் சேர்ந்து 13017 ச.கி.மீ பரப்பிலானவை.தற்போது 27 புகலிடங்கள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன.
[தொகு] நிதி ஆதாரம்
1979 - 80 வரை நடுவண் அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் 1980 - 81 முதல் நடுவண் அரசு உதவி பெறும் திட்டமாக மாற்றப்பட்டு நடுவண் அரசும் மாநில அரசும் சமமாகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன. உலகக் கானுயிர் நிதியமும் கருவிகள், நிபுணத்துவம், ஆவணங்கள் வடிவில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கான உதவியை அளித்துள்ளது.
[தொகு] புகலிடங்களின் பட்டியல்
வரிசை எண் | தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு | புகலிடத்தின் பெயர் | மாநிலம் | மொத்தப் பரப்பு (சதுர கிலோமீட்டரில்) |
1 | 1973 - 74 | பந்திப்பூர் | கர்நாடகா | 866 |
1999 - 2000 | நாகர்ஹோல் (விரிவாக்கம்) | 642 | ||
2 | 1973 - 74 | கார்பெட் | உத்தராஞ்சல் | 1316 |
3 | 1973 - 74 | கன் ஹா | மத்தியப் பிரதேசம் | 1945 |
4 | 1973 - 74 | மானஸ் | அஸ்ஸாம் | 2840 |
5 | 1973 - 74 | மேல்காட் | மகாராஷ்ட்ரா | 1677 |
6 | 1973 - 74 | பாலமவ் | ஜார்க்கண்ட் | 1026 |
7 | 1973 - 74 | ரந்தம்போர் | ராஜஸ்தான் | 1334 |
8 | 1973 - 74 | சிமிலிப்பால் | ஒரிசா | 2750 |
9 | 1973 - 74 | சுந்தரவனம் | மேற்கு வங்காளம் | 2585 |
10 | 1978 - 79 | பெரியார் | கேரளா | 777 |
11 | 1978 - 79 | சரிஸ்கா | ராஜஸ்தான் | 866 |
12 | 1982 - 83 | பக்ஸா | மேற்கு வங்காளம் | 759 |
13 | 1982 - 83 | இந்திராவதி | சத்தீஸ்கர் | 2799 |
14 | 1982 - 83 | நாகார்ஜுனசாகர் | ஆந்திரப் பிரதேசம் | 3568 |
15 | 1982 - 83 | நாம்டபா | அருணாச்சலப் பிரதேசம் | 1985 |
16 | 1987 - 88 | டுட்வா | உத்தரப் பிரதேசம் | 811 |
1999 - 2000 | கதேர்னியாகாட் (விரிவாக்கம்) | 551 | ||
17 | 1988 - 89 | களக்காடு- முண்டந்துறை | தமிழ்நாடு | 800 |
18 | 1989 - 90 | வால்மீகி | பிஹார் | 840 |
19 | 1992 - 93 | பெஞ்ச் | மத்தியப் பிரதேசம் | 758 |
20 | 1993 - 94 | தடோபா - அந்தாரி | மகாராஷ்ட்ரா | 620 |
21 | 1993 - 94 | பந்தவ்கர் | மத்தியப் பிரதேசம் | 1162 |
22 | 1994 - 95 | பண்ணா | மத்தியப் பிரதேசம் | 542 |
23 | 1994 - 95 | டம்பா | மிசோரம் | 500 |
24 | 1998 - 99 | பத்ரா | கர்நாடகா | 492 |
25 | 1998 - 99 | பெஞ்ச் | மகாராஷ்ட்ரா | 257 |
26 | 1999 - 2000 | பகுய் - நமேரி | அருணாச்சலப் பிரதேசம் - அஸ்ஸாம் | 1206 |
27 | 1999 - 2000 | போரி, சத்புரா, பச்மரி | மத்தியப் பிரதேசம் | 1486 |
மொத்தம் | 37761 |
[தொகு] வெளி இணைப்பு
ப்ராஜெக்ட் டைகர் குறித்த நடுவண் அரசின் வலைத்தளம் (ஆங்கிலத்தில்)