நிறம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.
புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.
[தொகு] இயற்பியலில் நிறம்
கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள்.
நிறம் | அலை நீள இடைவெளி | அதிர்வெண் இடைவெளி |
---|---|---|
சிவப்பு | ~ 625-740 nm | ~ 480-405 THz |
செம்மஞ்சள் | ~ 590-625 nm | ~ 510-480 THz |
மஞ்சள் | ~ 565-590 nm | ~ 530-510 THz |
பச்சை | ~ 500-565 nm | ~ 600-530 THz |
இளநீலம் | ~ 485-500 nm | ~ 620-600 THz |
நீலம் | ~ 440-485 nm | ~ 680-620 THz |
ஊதா | ~ 380-440 nm | ~ 790-680 THz |
Continuous optical spectrum |
||
Computer "spectrum" |
சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் கதிர் வீச்சின் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைய முடிகின்றது. அவற்றுள்ளும் ஒரு சிறிய பகுதி மட்டுமே கண்ணுக்குத் தெரியக்கூடிய ஒளியாகும். இவ்வாறு கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள் 400 தொடக்கம் 700 நனோமீட்டர் அலை நீள வீச்சினுள் அடங்கியவை. இதனுள் அடங்கும் வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் வெவ்வேறு நிறப் புலனுணர்வுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன. இந்த வீச்சின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையின் ஊதா நிறமும் உள்ளன.
[தொகு] நிறப் புலனுணர்வு
பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத் திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது. சுமார் --- மில்லியன்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ள இந் நரம்பு முனைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவை கூம்புகள் என்றும் கோல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் கூம்புகளே நிறப் புலனுணர்வுக்கு அடிப்படையானவை. பல்வேறு நிறங்களையும் வேறுபடுத்தி உணரும் வகையில் கூம்புகள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. ஒரு வகை சிவப்பு நிறத்துக்குரிய ஒளியை உணரவல்லது. ஏனைய இரண்டு வகைகளும் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை உணரக்கூடியன. இதனால் இம் மூன்று வகைக் கூம்புகளுக்கும் சிவப்புக் கூம்பு, பச்சைக் கூம்பு, நீலக் கூம்பு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் உணரப்படுகின்ற அடிப்படையான மூன்று நிறங்களே முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன.
[தொகு] முதன்மை நிறங்கள்
சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இம் மூன்றையும் சம அளவில் கலக்கும்போது வெள்ளை நிறம் பெறப்படுகின்றது.