கரோலஸ் லின்னேயஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கரோலஸ் லின்னேயஸ் (மே 23, 1707 - ஜனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளரும், விலங்கியலாளரும், மருத்துவரும் ஆவார். புதிய தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறையினதும், பெயர்முறையினதும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால வாழ்சூழலியலின் (ecology) முன்னோடிகளாகக் கருதப்படுபவர்களில் இவரும் ஒருவர்.
[தொகு] பெயர்
'கார்ல் லின்னேயஸ்', 'கரோலஸ் லின்னேயஸ்', கார்ல் வொன் லின்னே, 'கார்ல் லின்னே' போன்ற பல்வேறுபட்ட பெயர்கள்வழி இவர் குறிப்பிடப்படுகின்றார். இவரது உண்மையான சுவீடிஷ் மொழிப் பெயர் பற்றி இப்பொழுதும் குழப்பம் நிலவுகிறது. 'கார்லஸ் லின்னேயஸ்' என்பது லத்தீனாக்கம் செய்யப்பட்ட பெயராகும். இப்பெயரையே அவர், இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட தனது அறிவியல் வெளியீடுகளில் பயன்படுத்தியுள்ளார்.
[தொகு] வரலாறு
கார்லஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி, ஒரு பண்ணையில் பிறந்தார். ராஷல்ட் (Råshult) என அழைக்கப்பட்ட இது, தென் சுவீடனில் ஸ்மாலாந்து (Småland) மாகாணத்திலுள்ள Älmhult Municipality இல் அமைந்துள்ளது.
இவரது தந்தையார், மற்றும் தாய்வழிப் பாட்டனைப் போல இவரும் ஒரு தேவாலயக் குருவாவதற்காகவே வளர்க்கப்பட்டார். ஆனாலும் இவருக்கு அத்துறையில் நாட்டம் செல்லவில்லை. இவருக்குத் தாவரவியலில் இருந்த ஆர்வத்தைக் கண்ட இவரது ஊர்க்காரரான மருத்துவர் ஒருவரின் தூண்டுதலால் இவர் லுண்ட் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்பட்டார். ஓர் ஆண்டிற்குப் பின் உப்சலா பல்கலைக் கழகத்துக்கு மாறினார். பூக்களிலுள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரை ஒன்றால் கவரப்பட்ட இவர், அதே தலைப்பில் தானும் கட்டுரை ஒன்றை எழுதியதன் மூலம் தாவரவியற் பூங்காவில் பதவியொன்றைப் பெற்றார்.
1732 இல், அக்காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத லாப்லாந்து (Lapland) பற்றிய ஆய்வுப் பயணம் ஒன்றுக்கு உப்சலா அறிவியல் அக்காடமி இவருக்கு பொருள் உதவி செய்தது.