மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.
மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.
மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிஸ்டைன் சப்பலின் விதானத்திலும், வழிபாட்டு மேடைக்குப் பின்னுள்ள சுவரிலும் வரையப்பட்டுள்ளன. இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் ரோமிலுள்ள சென் பீட்டர்ஸ் பசிலிக்காவின் கவிமாடத்தை (dome) வடிவமைத்தார்.
இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது ஒரு தனிச் சிறப்பாகும். இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக் கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் தொடர்ந்தும் புழக்கத்தில் இருந்து வந்தது.
[தொகு] ஆரம்ப காலம்
மைக்கலாஞ்சலோ, காப்ரெஸ் (Caprese), தஸ்கனியிலுள்ள (Tuscany), அரெஸ்சோ (Arezzo) என்னுமிடத்தில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது.
சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 ல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது.