விக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கி என்பது ஒரு இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களே அத்தளத்தின் உள்ளடக்கத்தை திருத்தவோ கூட்டவோ குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும் இணையத்தளத்தை குறிக்கும். இது போன்ற பல இணையத்தளங்களில் பயனர் கணக்கு உருவாக்காமல் கூட உள்ளடக்க மாற்றங்களை செய்ய இயலும். செயல்பாட்டுக்கும் தொடர்பாடல்களுக்கும் எளிதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன. விக்கி என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் விக்கி மென்பொருளையும் குறிக்கும். விக்கிவிக்கிவெப் என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாகும். விக்கிவிக்கிவெப் என்ற பெயரை வார்ட் கன்னிங்ஹாம் என்பவர் முதன்முதலில் இட்டார்.
விக்கி என்னும் சொல், ஹவாய் மொழியில் வழங்கப்படும் விக்கிவிக்கி என்ற சொல்லின் சுருக்கம் ஆகும். இந்தச் சொல், செயல்களைத் துரிதப்படுத்த பயன்படுத்தப்படும் "வேகம் வேகம்" என்று பொருள் தரும் சொல் ஆகும். இந்த ஹவாய் மொழிச்சொல்லின் உண்மையான உச்சரிப்பு வீக்கிவீக்கி என்பதாகும். எனினும், தமிழுலகில் இவ்விணையத்தளங்கள் அறியப்பட்டபோது விக்கி என்ற உச்சரிப்பே பயன்படுத்தப்பட்டதால் அதுவே நிலைத்தது.
விக்கி மென்பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விக்கிபீடியா தளத்தை இயக்கும் மீடியாவிக்கியை குறிப்பிடலாம். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டு விக்கிபீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களை குறிப்பிடலாம். இது போன்ற தளங்களைத் தவிர்த்து, விக்கி இணையத்தளங்கள் ஒரு நிறுவனத்தின் உட்பயன்பாட்டுக்கும் நிர்வாகத்துக்கும் தொடர்பாடலுக்கும் கூட உதவுகின்றன.
[தொகு] வெளியிணைப்புகள்
- Making the Case for a Wiki (ஆங்கிலத்தில்)
- HowStuffWorks தளத்தில் விக்கிகள் பற்றிய செயல்விளக்கம் (ஆங்கிலத்தில்).