புடவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புடவை (Sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.
இது சுமார் 40 அங்குலங்கள் வரையில் அகலமான ஒரு நீண்ட துணியாகும். தற்காலத்தில் பொதுவாக இதன் நீளம் 4 - 5 யார் நீளம் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.
பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
உடலைச் சுற்றிக் கட்டுகின்ற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் இத்தகைய ஆடைகள் இருந்திருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்த புடவையின் தோற்றம் பற்றியும் இதே நிலைதான். இது பண்டைக் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் இது இந்தியாவிலேயே உருவானதென்பது வேறு சிலரின் கருத்து. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலேயே புடவைகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மகாபாரதத்தில் வரும் திரௌபதியின் புடவை களையும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படும், உடலைச் சுற்றி இறுக்கமாக கற்சட்டைபோல் புடவை உடுத்திய களிமண் உருவ பொம்மையொன்று வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிற்காலங்களைச் சேர்ந்த பலவிதமாகப் புடவை கட்டிய பெண்களின் உருவச் சிலைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக்கால இந்துக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் புனிதமான ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும். முஸ்லிம்களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும், தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் [[ரவிக்கை] போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
"இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சயுக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏறத்தாழ்வு காட்டாதது; விரவாக நடக்கக் கூடியது; இளமையாகக் காட்டுவது. இடையக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டு சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது." [1]
[தொகு] புடவையின் உறுப்புக்கள்
புடவை பொதுவாக ஒரு நீளமான, செவ்வக வடிவத் துணியே ஆனாலும் உடுக்கும் போது அமையும் இடம், மற்றும் வேறு காரணங்களினால் புடவையின் பகுதிகள் கரை, முந்தாணை அல்லது முகதலை, உடற்பகுதி என வெவ்வேறு பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றன. இவ்வுறுப்புக்களில் எவ்வித வேறுபாடும் இன்றி ஒரு சீராக அமைகின்ற எளிமையான புடவைகளும், ஒவ்வொரு பகுதியும் விதவிதமாக வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களைக் கொண்ட புடவைகளும் உள்ளன. புடவைகளின் கீழ்க் கரையும், முந்தாணையும் சிறப்பான அலங்கார வடிவங்களைக்கொண்டு அமைகின்ற உறுப்புக்களாகும்.
[தொகு] புடவை கட்டும் முறைகள்
இது புழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும், இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிகப் பொதுவான முறை, ஒரு முனையை இடுப்பிலிருந்து பாதம் வரை மறைக்கும்படி சுற்றிக் கட்டியபின்னர் மறு முனையை மார்பை மறைக்கும் படி தோளுக்கு மேலாகப் போட்டுத் தொங்க விடுவதாகும். எனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பண்பாட்டு மானிடவியலாளரும், புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் (Chantal Boulanger) என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார்.
- நிவி பாணி (Nivi)
- வட இந்திய / குஜராத்தி பாணி
- மகாரஷ்டிர / கச் பாணி
- திராவிடப் பாணி
- குடகு பாணி
- கோண்டு பாணி
- இரு துண்டுப் புடவை
- இனக்குழுப் பாணிகள் (tribal styles)
[தொகு] மேற்கோள்கள்
- ↑ செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 43-44.